பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம் | அன்னை காமாட்சியின் பாதை

4181

ஒரு ஆலயத்தின் வரலாற்றை அறிந்து அத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் வரும் பரவசம் அளவிடமுடியாதது. ஸ்தல புராணங்களின் வாயிலாக ஒரு கோவிலின் புகழ், இறைவனின் அருட்செயல்கள், அதனினுள்ள இறை ரகசியம், வாழ்முறை நெறிகள் பற்றி நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளமுடிகிறது. நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. பென்னாகரம் பாலா வெங்கட்ராமன் பல்லாயிரக்கணக்கான கோயிலிற்கு சென்று அதன் புராணத்தை ஆராய்ந்து தொகுத்து வருகின்றார்.

நம் விஸ்டம் குடும்பத்திற்காக “பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம்” என்ற புதிய பகுதியை தொடங்கி அவர் இயற்றியுள்ள ஸ்தல புராணங்களை அனைத்து ஆர்ய வைசியரிடமும் கொண்டு சேர்த்து இறையருள் பெறுவோம்.

அன்னை காமாட்சியின் பாதை

காமாட்சி

மாங்காடு எனும் தலத்திலும் காமாட்சி, காஞ்சியிலும் காமாட்சி, தருமபுரியிலும் கல்யாண காமாட்சி, இவை அனைத்திற்கும் என்ன சம்பந்தம் என புராணத்தில் ஆராய்ந்த போது கிடைத்த புதையல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அன்னை காமாட்சியின் பாதை எனும் தலைப்பில் பதிவை பதிவிடுகின்றேன். தன் மனைவி பார்வதியையே ஈசன் எவ்வளவு அலைக்கழித்துள்ளார்!!! பக்தர்களாகிய நாம் எம்மாத்திரம்….!

மாங்காடு

கைலாயத்தில் ஒரு முறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூடவே உலகம் இருண்டது. சிவன் மானிடப்பிறவி எடுக்கும்படி பார்வதிக்கு சாபமிட்டார். பார்வதி இத்தலத்தில் இருந்து வழிபட்டபின் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அதன்படி பார்வதி இங்கு வந்து தவம் செய்த இடம் தான் மாங்காடு.

வெள்ளீசுவரர் ஆலயம்

அப்படி அன்னை ஊசிமுனையில் தவம் செய்த தலம் மாங்காடு காமாட்சி அன்னை ஆலயம். அருகே வெள்ளீசுவரர் ஆலயம் உள்ளது. மாங்காடு காஞ்சிக்கு முன்னோடி எனலாம்? அது என்ன வெள்ளீசுவரர் ஆலயம்? என்கிறீர்களா? வாருங்கள் தலவரலாறுக்கு செல்வோம்.

மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்வதற்காக, வாமனராக குள்ள அவதாரம் மகாவிஷ்ணு, மகாபலியிடம் தானம் கேட்டு சென்றார். அவனிடம் மூன்றடி வேண்டும் என்றார். அவரும் ஏற்றுக்கொண்டார். அப்போது அவரது குலகுருவான சுக்ராச்சாரியாருக்கு, வந்திருப்பது திருமால் என்று தெரிந்து விட்டது. எனவே, மகாபலியிடம் தானம் தர வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், மகாபலி கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என சொல்லி அவர் கூறியதை கேட்கவில்லை. அவன் திருமாலுக்கு மூன்றடியை கொடுப்பதற்காக, தாரை பாத்திரத்தை எடுத்தார். மனம் பொறுக்காத, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து தாரை பாத்திரத்தில் நீர் வெளியேறும் துளையை அடைத்தார். அப்போது வாமனராக வந்த திருமால், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணில் குத்தினார். அதன்பின் மூன்றடியில் மூன்று உலகையும் அளந்தார். இவ்வாறு கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை கிடைக்க, இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தார்.

காஞ்சிக்கு வா!!!

அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை.

ஈசன் பார்த்தார், ஒரிடத்தில் ஒரு தேவதைக்கு மட்டுமே அருள வேண்டும் என நினைத்தார் போலும், தன் பக்தனுக்கு முதலில் இறங்கினார். சுக்கிரன் முன் தோன்றி சுக்கிரா! வாமனனால் இழந்த கண்ணை மீண்டும் பெறுவாயாக எனக்கூறி அருளினார்.

காமாட்சியை அழைத்தார்!!! நீ காஞ்சி சென்று என்னை நோக்கி தவமிருப்பாயாக! அங்கே வந்து உனக்கு அருளுவேன் எனக்கூறி மறைந்தார்….. அப்படி அன்னை இறைவன் அழைத்ததின் பேரில் ஈசன் முன் வந்து நின்றதன் அடையாளமாக வெள்ளீசுவரர் ஆலயத்தில் அன்னை காமாட்சியின் பாதம் விளங்குகிறது. வாருங்கள் ஆலயம் செல்வோம்….

கோவிலில் உள்ள அன்னை காமாட்சியின் பாதம்

ஆலய அமைப்பு

இத்தலவிநாயகர் நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

சுவாமி விமானத்தில் எண்திசை அதிபர்கள் சிற்பம் இருக்கிறது. பிரகாரத்தில் வீரபத்திரர் இருக்கிறார். இவரது வலது பாதத்திற்கு அருகே ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள முருகன் சன்னதியில், சுவாமி, அம்பிகை இருவருடனும் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடப்புறம் திரும்பியிருப்பதும், லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், பிரயோக சக்கரத்துடன் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் இருப்பதும் சிறப்பு. கோஷ்டத்தில் உள்ள துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

மாங்காடு வெள்ளீசுவரர் ஆலய கோபுரம்

பார்க்கவேசுவரர்

இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார். துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், “வெள்ளீஸ்வரர்’ என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு. இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

காமாட்சியின் பாதை அடுத்த பதிவில் தொடரும்…

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp