ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 1

1939ஆம் ஆண்டு ஒரு மாலைப்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில ஒரு இளைஞன் கதராடை அணிந்து கொண்டு ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். அப்பொழுது சரக் சரக் என பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தத்துடன் திபுதிபுவென நுழைந்த நிஜாம் அரசைச் சார்ந்த ஆங்கில போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். அந்த இளைஞன் கண்களில் அப்பொழுது கூட பயம் தென்படவில்லை, அதற்கு மாறாக எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் என்று ஒன்றுமே தெரியாத அப்பாவியைப்போல் கேட்டான் அந்த இளைஞன்.

உடனே அந்த இளைஞனின் முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு,போலீஸ் ஸ்டேஷனுக்கு வா, அங்கு உனக்கு விளக்கமாக பதில் சொல்கிறோம் என்று ஏளனமாக சொன்னார் ஒரு போலீஸ்காரர்.

இதை கேட்டதும் அவன் சற்றும் கவலை கொள்ளவில்லை, மாறாக என்னுடைய பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன், இதோ அதை முடித்துவிட்டு நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்றான்.

என்ன எழுதிவிட்டு வருகிறாயா? நீ இனிமேல் கட்டுரையே எழுதக் கூடாது என்பதற்காகத்தான் உன்னை கைது செய்கிறோம், நட..ஸ்டேஷனுக்கு என்று சொல்லி அந்த இளைஞனைத் தரதரவென இழுத்துச்சென்றனர்.

ஸ்டேஷனில் ஆங்கில உயர் அதிகாரி முன் நிறுத்தப்பட்டான் அந்த இளைஞன். ஒரு தெலுங்குப் பத்திரிக்கையை அவன் முன்னால் தூக்கிப் போட்ட அந்த அதிகாரி அந்த தெலுங்குப் பத்திரிக்கையின் பெயர் கிரந்தமாலா (விலை ஒரு அணா) என்று எழுதியிருந்தது. அதை பார்த்ததும் அந்த இளைஞன் முகத்தில் சட்டென்று புன்னகை தோன்றி மறைந்தது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் நீ தானா என அந்த அதிகாரி கேட்டார். ஆம், என்று பெருமிதத்தோடு சொன்னான் அந்த இளைஞன்‌. அந்த அதிகாரியின் குரலில் உடனே உஷ்ணம் ஏறியது. உனக்கு இருபது வயது கூட ஆகவில்லை அதற்குள் ஆங்கில அரசை எதிர்த்து நாச வேலை செய்த தீவிரவாதியான அல்லூரி சீதாராம ராஜூவை பற்றி புகழ்ந்து அதுவும் உருது மொழியில் இந்த தெலுங்கு பத்ரிக்கையில் எழுதி இருக்கிறாய் உனக்கு என்ன தைரியம்? என்று சீறினார் அந்த அதிகாரி.

மீண்டும் புன்னகைத்தான் அந்த இளைஞன். ஐயா இந்த சீதாராம ராஜு தீவிரவாதி அல்ல. உண்மையை உரக்கச் சொன்ன தேசபக்தன், சிறந்த போராட்ட வீரன், உங்கள் அராஜகப் போக்கை தட்டிக்கேட்ட உத்தமன், அவரைப் போய் தீவிரவாதி என்கிறீர்களே, அதனால் தான் உண்மை நிலையை மக்கள் அறிய வேண்டும் என்பதற்கும், அவர் செய்த வீர சாகசத்தை என் நாட்டில் உள்ள அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் அவரின் வரலாற்றை உருது மொழியில் எழுதி இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் இதை தெலுங்கிலும் எழுத உள்ளேன் என்றான் கேலியாக. இதைக் கேட்டதும் ஏற்கனவே சிவந்திருந்த அந்த அதிகாரியின் முகம் மேலும் சிவந்தது.

அப்போது ஒரு அதிகாரி குறுக்கிட்டு சார், இதுமட்டுமல்ல இவன் யாருக்கும் தெரியாத பல சுதந்திர போராட்ட வீரர்களின் சாகசங்களை எப்படியோ தேடி கண்டுபிடித்து எழுதி ஆந்திர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறான் என்று நம் ரகசிய போலீசார் மூலம் துப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

அவ்வளவுதான் எரிகிற தீயில் எண்ணெயாக இதைக் கேட்டதும் அந்த ஆங்கில அதிகாரியின் முகம் மேலும் ரத்த சிவப்பாக மாறியது. தன் கையிலிருந்த கிரந்த மாலா பத்திரிகையை கிழித்து அந்த இளைஞன் முகத்தில் விசிறி அடித்த அவர், இவனை கைது செய்து சிறையில் அடையுங்கள் இவன் இனிமேல் எந்த மொழியிலும் எழுதக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்தினார்.

போலீஸ்காரர்கள் உடனே அந்த இளைஞனை தரதரவென இழுத்துச்சென்று சிறையில் தள்ளி பூட்ஸ் காலால் உதைத்து பின் சிறையை பூட்டிவிட்டு சென்றனர்.

எதற்கும் கவலைப்படாமல் தன் உதட்டில் தவழ்ந்த ரத்தத்தை துடைத்துவிட்டு, அடுத்து எந்த தேச பக்தரின் கதையை எழுதுவது, தூங்கி கிடக்கும் நம் மக்களின் சுதந்திர வேட்கையை எப்படி தட்டி எழுப்புவது என்று சிந்தித்தபடி அந்த சிறைச்சாலையையே போதிமரம் ஆக்கினான் அந்த இளைஞன்.

அந்த 20 வயது இளைஞனின் பெயரை அறிய நீங்கள் ஆவலாக உள்ளீர்கள் அல்லவா ?

அவர் தான் ஸ்ரீ வைஸ்ய பந்து என்று பின்னர் பாராட்டப்பட்டவரும், பிற்காலத்தில் புகழ்வாய்ந்த வாசவி கிளப்பை தோற்றுவித்த கல்வகுண்டல சந்திரசேன குப்தா (கே.சி குப்தா) என்றால் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியோடு ஒரு பெருமிதம் தோன்றுகிறதல்லவா? ஆம், அகில இந்திய அளவில் ஏன் அகில உலகளவில் வைஸ்யர்களை ஒன்றிணைக்க பாடுபட்ட இவரின் வாழ்க்கை சரித்திரம் அனைவராலும் அறியப்பட வேண்டிய உன்னத சரித்திரம் ஆகும்!

அப்பப்பா எவ்வளவு போராட்டங்கள், எத்தனை சோதனைகள் அத்தனையையும் சந்தித்து வெற்றிபெற்ற அவரின் வாழ்க்கை வரலாற்றை இனி பார்ப்போமா?

பண்ருட்டி சொ.முத்துக்குமார்

To be continued…

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group