வாசவியின் அக்னி பிரவேசம் – ஒரு பார்வை

7937

வாசவியின் அக்னி பிரவேசம் – ஒரு பார்வை

கிரகத்தில் அதாவது இடத்தில் பிரவேசித்தல் கிரகப்பிரவேசம் என்கிறோம். அதேபோல் அக்னியில் பிரவேசித்தல் அக்னிப்பிரவேசம், எனினும் இவ்வாறு அக்னியில் பிரவேசித்தல் என்பது சாதாரண காரியமல்ல!! மாபெரும் அசாதாரண சக்திகளுக்கு அது சாத்தியம்!! எப்படி என்றால்? திரேதாயுகத்தில் அன்னை சீதை அதுபோல கலியுகத்தில் அக்னி பிரவேசம் செய்த ஓர் அற்புத சக்தி என்றால், அது நம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி மட்டுமே.

பிற கருத்துகள்

வாசவியின் இந்த அக்னி பிரவேசத்தை பற்றி பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரிய வைசியர்கள் விஷ்ணுவர்த்தனனை எதிர்க்க முடியாமல் அக்னிப்பிரவேசம் செய்ததாக சில கருத்துக்களும், ஆரிய வைசியர்களின் அகிம்சையை பிரதிபலிக்கவே இந்த அக்னிப்பிரவேச முடிவு என்றும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் உண்மை என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம் ஆகும்.

பார்வதியின் அவதாரம்

சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், வாசவியின் அவதாரம் என்பது முழுக்க முழுக்க சாப நிவர்த்திக்காக எடுக்கப்பட்ட உமையோரு பாகனின் மறுபாகமாகிய பராசக்தியின் ஓர் அவதாரப் படலம் ஆகும்.

அன்னை பார்வதி இந்த பூவுலகில் கன்னிகா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தது சாபத்தினால்!!

ஒரு கந்தர்வன் கீழைச் சாளுக்கிய மன்னனாக இந்த உலகில் பிறந்தது சாபத்தினால்,

கைலாயத்தில் சிவ சேவகம் செய்து வாழ்ந்த ஓர் இனக்குழு பூலோகத்தில் ஆரிய வைசியர்கள்களாக பிறப்பெடுத்தது ஒரு சாபத்தினால்!!

எப்போதும் சிவத்தை சுமந்து சிவ நெறியில் வாழும் நந்திதேவர் பெனுகொண்டாவில் விருபாக்ஷனாக பிறந்தது சாபத்தினால், இதில் பார்வதி தேவி அன்னையை பூவுலகில் பிறப்பெடுக்க வைத்தது சாபம் மட்டும் காரணம் அல்ல.

அது என்ன சாபங்கள்?? வாருங்கள் பார்ப்போம்.

சாபங்கள்

ஒருமுறை கைலாயத்தில் நந்திதேவர் சிவபெருமானை நடனமாடி மகிழ்வித்து வணங்கினார். ஆனால்  பார்வதிதேவியை வணங்க மறந்து விட்டார்.

பார்வதி தேவி நந்தி தன்னை வேண்டுமென்றே வணங்காமல் புறக்கணித்ததாக எண்ணி அவரை பூமியில் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார்.

தான் விரும்பிச் செய்யாத தவறுக்கு தன்னை சபித்ததை எண்ணி வருத்தமும், கோபமும் அடைந்த நந்தி தேவர் பதிலுக்குப் பார்வதியை பூமியில் பெண்ணாகப் பிறந்து கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

இப்படி நந்தி தேவரும், பார்வதி தேவியும் ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு பெனுகொண்டா நகரை ஆண்டு வந்த குசுமஸ்ரேஷ்டி என்போருக்கும், குசுமாம்பிகை அம்மைக்கும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

பெண் குழந்தைக்கு வாசவி எனவும், ஆண் குழந்தைக்கு விரூபாஷன் என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.

சித்திரகண்டன் என்னும் கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் பூமியில் விஷ்ணுவர்த்தன் என்ற மன்னனாகப் பிறந்தான்.

அது சரி ஆரிய வைசியர்கள் எதற்காக ஆந்திர நிலத்தில் அவதரித்தனர்? வாருங்கள் பார்ப்போம்.

பிராமணர்களின் சாபம்

இதற்கு சான்றாக புராண நிகழ்வு ஒன்றை பார்ப்போம்.
படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன் அவையில் பிராமணர், சத்ரியர், வைசியர்கள் குடியிருந்தனர். பிரம்மதேவன் அவர்களைக்கண்டு தத்தம் கோத்தரங்களைப் பற்றித் தெரிவிக்குமாறு ஆணையிட்டார்.

பிராமணர்களின் சங்கத்தை சார்ந்த பிரதிநிதியாகக் துர்வாச முனிவர் எழுந்து கூறினார்.

பிரம்மதேவனே! எங்களில் 107 கோத்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சிறப்பாகக் கருதப்படுவது 18 மட்டுமேயாகும்.

சத்ரியர்கள் சங்கத்தைச் சார்ந்த தனஞ்செயன் என்னும் மன்னன் எழுந்து பகர்ந்தான்.

பகவானே! எங்களில் 7 கோத்திரங்கள் உள்ளன. அவை ஏழும் சிறப்புடையது.

வைசியர்களின் சங்கத்தைச் சேர்ந்த சமாதி எனும் வைசிய முனிவர் தெரிவித்தார்.

உங்களையெல்லாம் படைத்த உத்தமோத்மரே! எங்கள் வைசிய குலத்தில் 714 கோத்திரங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வாழும் வைஸ்ய குல மக்களை பிரம்மன் அகமகிழ புகழ்ந்தான்.

பிராமணர்களின் கோத்திரங்களை ஆங்கீரச முனிவரும், சத்ரியர்களின் கோத்திரங்களை வசிஷ்ட முனியும், வைசியர்களின் கோத்திரங்களை அபரார்க்க மகாமுனியும் நிச்சயம் செய்து நடைமுறை படுத்தினார்கள்.

இம்மூன்று முனிவர்களும் பிரம்ம தேவனின் மானச புதல்வர்கள். பிரம்மதேவனின் விருப்பப்படி இம் மூவரும் மூன்று வர்ணத்தாருக்கும் ஜாதகம் எழுதி பெயர் சூட்டி கோத்திரங்கள் வகுத்தளித்து வழிகாட்டினார்கள்.

வைசியர்கள் பிரம்ம தேவனின் தொடையினின்று உண்டானார்கள் என்று புராண வரலாறும் பண்டைய நூல்களும் சாஸ்திரங்களும் இயம்புகின்றன.

பிரம்ம தேவனின் புகழ்ச்சியினால் மட்டிலா மகிழ்ச்சி கொண்ட வைசியர்களில் பலர் பிராமணர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக்கண்டு எள்ளி நகையாடி பரிகசித்தார்கள்.

சில வைஸ்யர்கள் மட்டும் மமதை கொள்ளாது நிலை தடுமாறாது மற்றார் மனம் புண்படாதவாறு அடக்கமாக இருந்தனர். இகழ்ச்சிக்கு ஆளான பிராமணர்கள் அமைதியாக இருப்பார்களா?

வேள்வித் தீ

சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள், எள்ளி நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும் எங்களை இகழாத ஆரிய வைசியர்கள் ஒரு கன்னியின் பொருட்டு 102 கோத்திரக்காரர்கள் மட்டும் புனித வேள்வித் தீயில் தங்களை அர்பணித்துக் கொண்டு புகழேணியில் ஏறி ஆர்ய வைசியர் என பாராட்டப் பெறுவீராக! இந்த 612 கோத்திரங்களும் வேள்வித்தீயைக் கண்டு அஞ்சி உயிர் காக்க ஓடி பழிக்கப்படுவாராக, என சபித்தனர்.

இப்படி பிராமணர்களின் சாபத்திற்கு ஆளான வைசிய முனிவர்கள் பெனுகொண்டாவில் ஆரிய வைசியர்களாக ஏன் அவதரித்தனர்? அதாவது வாணியர், நாடார், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் என பல வணிக சமூகங்கள் இருக்கும்போது, ஆரிய வைசியர்களாக ஏன் பிறப்பெடுத்தனர்?? ஏனெனில் ஆரிய வைசியர்களுக்கும் யோகத்திற்கும் மிகப்பெரிய சம்பந்தம் உண்டு என்பதை நான் பலமுறை தெரிவித்து இருக்கின்றேன்.

வாசவி மற்றும் விருபாக்‌ஷன் கூட ஆய கலைகள் 64 யும் திறம்பட பயின்றார்கள். அவர்கள் தசமகா வித்யாவில் சிறந்து விளங்கினார்கள்.

வெறும் சாபங்கள் தான் கன்னிகா பரமேஸ்வரி அன்னை அக்னி பிரவேசம் செய்ய காரணமா?? அது தான் இல்லை, இதில் இன்னும் சில காரணிகள் உள்ளன..

இதில் சிவநிந்தனையும், சிவ பக்தியும் சூட்சும மறைபொருளாக இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சிவநிந்தனை

கிரேதா யுகத்தில் சிவபெருமானின் மனைவியான தட்சனின் மகளான தாட்சாயணி சிவனின் ஆணையையும் மீறி தட்சனின் யாகத்திற்கு சென்ற பாவம் போக, கிரேதா யுகத்தில் சதி தேவியாக அக்னி பிரவேசம் செய்தார்.

திரேதாயுகத்தில் வேதவதியாக சீதைக்கு பதிலாக அக்னி குண்டத்தில் இறங்கினாள்.

துவாபரயுகத்தில் யோகமாயையாக அக்னி ஏறினாள்.

கலியுகத்தில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி யாக அக்னி பிரவேசம் செய்தால்.

இவ்வாறு சிவனின் பேச்சையும் கேளாமல் சிவனின் மனைவி செய்த சிவநிந்தை எனும் பாவத்திற்காக நான்கு யுகங்களில் அக்னி பிரதேசங்களை அன்னை பார்வதி செய்தார்.

சிவ பக்தியின் மகத்துவம்

கதையை சற்று ஆராய்ந்தால் இன்னோரு உண்மை புலப்படும், கைலாயத்தில் சிவ வாகனமாக இருக்கும் நந்தியம்பெருமானே விருபாஷனாக பிறந்தும் வாசவியை காப்பாற்றாமல் அக்னிபிரவேசம் செய்யவிட்டது ஏனோ?

வெறும் கந்தர்வன் சித்திரகண்டனாக இருந்து புவியில் விஷ்ணு வர்த்தனாக பிறந்த அரசனை சிவ பெருமானுடைய வாகனமான நந்தியம் பெருமானாகிய விருபாஷன் வெல்ல முடியாதா? என்ன?

எல்லாவற்றிற்கும் மேலாக பார்வதி தேவியாகிய வாசவி விஷ்ணுவர்தனை கண் பார்வையிலேயே எறிக்க முடியாதா என்ன?

முடியும், முடியும், எல்லாமே முடியும். இவர்களை தடுத்தது எது? என பார்த்தால்…

சிவ பக்திக்கு மரியாதை

சித்திரகண்டனின் சிவ பக்தி. சித்திரகண்டன் சாதாரண மனிதனல்ல. சிவபெருமான் மேல் ஆத்மார்த்தமான பக்தி வைத்து சிவனையே உருகி உருகி பக்தி செய்தவன். கைலாயத்தில் அகோர தவம் புரிந்தவன். சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் சாதாரண மனிதனாக பிறந்திருக்கலாமே? முப்போகமும் அனுபவிக்கும் வேங்கி நாட்டை தலைநகராக கொண்டு ஆளும் கீழை சாளுக்கிய சக்ரவர்த்தியான விஷ்ணுவர்தனாக பிறக்க வேண்டிய அவசியம் என்ன…?

தெய்வபிறவிகளாகிய விருபாஷனும், வாசவியும் கூட விஷ்ணுவர்தனை ஒன்றும் செய்யவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?

பராசக்தி அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்கிற நந்தியம்பெருமானின் சாபமும், விஷ்ணுவர்தனனுடைய சிவபக்தியும். ஆம் சிவபக்தியின் மகத்துவம் அப்பேர்பட்டது. எவன் ஒருவன் சிவத்தை முதன்மையாக கொண்டு வாழ்வை நெறியாக மாற்றிகொள்கிறானோ. அவனுக்கு அடுத்த பிறவி இல்லை, அவன் தலைமுறைளுக்கு எல்லாம் சிவம் துணை புரியும் எனும் அசைக்க முடியாத உண்மை!!.

நிகழ்கால சிந்தனை

ஆரிய வைசியர்கள் வீரம் காட்ட தயக்கம் கொண்டவர்களாக இருந்திருந்தால், 102 கோத்திர மக்கள் அனைவருமே அக்னியில் ஆகுதியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் 102 கோத்திரத்தில் கோத்திரத்திற்கு தம்பதியர் என 102 கோத்திர தம்பதியர் ஆகுதி ஆயினர்.

விஷ்ணு வர்தனனுடன் போர் புரிய தயங்கியிருந்தால், முதலில் வாசவியும், குசும பூபதி மற்றும் குசுமாம்பிகையுடன், விருபாஷனும் அக்னி பிரவேசம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் வாசவியை மணம் செய்விக்க மறுத்த வாசவியின் குடும்பத்தின் மேல் தான் மன்னனின் கோபம் செல்லும் சரிதானே, ஆனால் விருபாஷன் அக்னி பிரவேசம் செய்யாமல் தன் தந்தைக்கு பிறகு பெனுகொண்டாவின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

மேலும் விஷ்ணுவர்த்தனன் இறந்த பிறகு, அவன் மகன் இராஜ இராஜ நரேந்திரன் கோபம் கொண்டு பழிவாங்க விருபாஷன் மீது நடைவடிக்கை எடுக்காமலா?? இருந்திருப்பான். ஆனால் அனைத்தையும் கடந்து விருபாஷனிடம், காலில் விழுந்து இராஜ இராஜ நரேந்திரனே மன்னிப்பு கேட்கிறான் என்றால் விருபாஷனின் வீரமும், அஹிம்சை வழிமுறையும் மட்டுமே காரணம் என்றால் அது மிகையாகாது.

இதிலிருந்து வைசியர்கள் அஹிம்சையை விரும்பவர்களே அன்றி வீரம் வெளிகாட்ட தெரியாதவர்கள் அல்ல என்பதை தெளிவர புரிந்து கொள்ளலாம்.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT