ஆன்மீக சுற்றுலா – யாழ் முறிந்த (மறைந்த) கதை | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

3606

மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

யாழ் இசைக்கருவியில் பல வகை உண்டாம்! வில் யாழ், பேரி யாழ், மகர யாழ்…. (இது மட்டுமல்லாமல் 1000 நரம்புகளைக்கொண்ட ஆதி யாழ் இருந்ததாம். இதைக்கொண்டு பயங்கரமான காட்டு விலங்குகளையும், ராட்சர்களையும் விரட்டுவதற்கு பயன்படுத்தினார்களாம். இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்).

பொதுவாக இசைக்கருவிகளை வாசித்து பாடுபவர்களுக்கு பாணர் என்று பெயர்.

விருதாசலத்திற்கு அருகில் உள்ள திருவெருக்கத்தம்புலியூரில் (இந்த ஊரின் தற்போதைய பெயர் ராஜேந்திரன் பட்டினம் இந்த பெயர் மாற்றத்திற்கு பின் ஒரு சுவையான கதை உண்டு அதை பிறகு பார்க்கலாம்) பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் மனைவியின் பெயர் மதங்கசூளாமணி. இருவரும் யாழ் வாசிப்பதில் விற்பன்னர்கள்.

ஒரு முறை மதுரைக்குச் சென்று சொக்கநாதனை வணங்க கோயிலின் வாசலில் நின்று பாட மக்கள் அனைவரும் இவர்களின் இசையில் மயங்கிய இவர்களை சூழ்ந்து நின்று ரசித்தனராம். அக்காலத்தில் பாணர்களுக்கு கோயிலின் உள்ளே சென்று பாடுவதற்கு உரிமையில்லை. ஆனால் சொக்கநாதரே அசிரீரியாக இருவரையும் சன்னதிக்கு அழைத்துவந்து பொற்பலகையிட்டு அமரச் செய்து பாட அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினாராம். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய யாழ்பாணரின் பெருமையை அனைவரும் அறிந்து வியந்தனராம்.

அதுபோல் திருவாரூரிலும் இறைவன் இவருக்கு அருள்புரிந்தானாம். (இறைவன்தான் இசைக்கு மயங்குபவன் ஆயிற்றே)

சீர்காழியில் ஞானசம்பந்தரை இவர்கள் சந்திக்க தன்னோடு பயணித்து தன் பாடலுக்கு இசையமைக்க முடியுமா? என அவர் கேட்க, தான் கடவுளாக மதிக்கும் சம்பந்தரோடு பயணிக்க பாணருக்கு கசக்குமா என்ன? பெரும் மகிழ்ச்சியோடு அவரோடு பயணித்தாராம் யாழ்பாணர்.

திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரர் ஆலயம் சென்று பாடிய பிறகு யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரை அணுகி தன்னுடைய தாய் பிறந்த தருமபுரம் எனும் ஊர் மிக அருகில் உள்ளதாகவும் அங்கே சென்று தன் பாட்டனாரை சந்திக்க அனுமதி கோரியதாகவும் ஆனால் இதைக்கேட்ட திருஞானசம்பந்தர் தானும் அங்கு வருவதாக கூறினாராம்.

நெகிழ்ந்து போன யாழ்ப்பாணர் பாட்டனார் வசித்துவந்த தருமபுரத்திற்கு ஞானசம்பந்தரையும் அழைத்துச்சென்றாராம்.

அப்பொழுது அங்கு ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்தது. ஞானசம்பந்தரின் பாடல்கள் பிரபலமடைய பாணரின் இசைதான் காரணம் என உறவினர்கள் பேசுவதைக் கேட்டவர் அதிர்ந்து போனாராம். கண்களில் நீர் சொறிய இறைவனின் அருள்பெற்ற ஞானசம்பந்தர் எங்கே நான் எங்கே, நான் இசையமைப்பதற்காகவே எளிமையாக தன் குருநாதர் பாடுவதாகவும், அவர் நினைத்தால் யாராலும் யாழில் இசையமைக்க முடியாத வகையில் பாடல் பாட முடியும் என்றும் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரக்க கூறினாராம்.

பாணரின் வற்புறுத்தலால் ஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி” எனும் பதிகத்தை கமகத்தோடு பாட (இதற்கு யாழ் முறிப்பதிகம் என்று பெயர்) அந்த பதிகத்தை இசைக்க முடியாமல் பாணர் வாசிப்பதை நிறுத்தி பார்த்தீர்களா? இந்த மகானால் தான் நான் பெருமையடைந்தேன் என்று கூறி கமகம் வாசிக்க இயலாத யாழ் இசைக்கருவியை முறிக்க முற்பட்டாராம். பெருந்தன்மையுடன் ஞானசம்பந்தர் அதை தடுத்தாராம்.

இதற்கு பின்தான் யாழ் இசைக்கருவியின் பயன்பாடு குறைந்து மீண்டும் வீணையின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறுகிறார்கள்.

சரி, இனி திருநள்ளாறுக்கு செல்லும் அன்பர்கள் இனிமேல் தவறால் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தருமபுரம் (மாயவரத்திற்கு அருகில் உள்ள தருமபுரம் அல்ல) யாழ்முறிநாதரையும் தவறாமல் தரிசியுங்கள்.
அப்படியே தன் குருநாதரின் மீது அன்பு வைத்து மிகப்பெரிய விற்பனராக திகழ்ந்தாலும், இறைவனே இவர் இசைக்கு மயங்கி அருள்புரிந்திருந்தாலும், தன் குரு பக்தியாலும், தன்னடக்கத்தாலும் நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும் வணங்கி மகிழுங்கள்.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group