ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை

4430

ஆரிய வைசிய சொந்தங்களே!

ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.

வம்சம்

வம்சம் ஒன்றிற்கு மேற்பட்ட பிரவரான்களை கொண்டது.

ஆரிய வைசியர்கள் மூன்று வம்சத்தை சேர்ந்தவர்கள், அவை:

1) சூரிய வம்சம்,
2) சந்திர வம்சம்,
3) அக்னி வம்சம்,

சூரிய வம்சம்

சூரிய வம்சத்தவர்கள் சூரியனிலிருந்து பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். அவர்கள் வணங்கும் சிவ வடிவம் சந்திரசேகரன் வடிவம்.

காசியபஸ, ஆங்கிரஸ, பார்க்கல பிரவான்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சூரியவம்சத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களின் குரு பிரகஸ்பதி.

குறிப்பாக பரத்வாஜஸ, புலத்தியஸ, காசியபஸ, புண்டரீகஸ, கௌதமஸ, பார்க்கல கோத்திரங்களை சேர்ந்தவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்.

சந்திர வம்சம்

இவர்கள் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள். மகாவிஷ்ணு சந்திரனின் வடிவமாக கருதப்படுவதால் சந்திர வம்சத்தவர் மகாவிஷ்ணுவை தங்கள் வழிபாட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவர்களின் குரு சுக்ரச்சாரியார்.

பெரும்பாலும் அத்ரி, பார்க்கவ பிரவரான்களை கொண்ட கோத்திரத்தாரும், பராசரஸ, ஜதுகர்னஸ, துர்வாஸச கோத்திரத்தாரும் சந்திரவம்சத்தை சேர்ந்தவர்கள்.

அக்னி வம்சம்

இவர்கள் அக்னியின் இருந்து தோன்றியவர்கள், சிவபெருமான் மற்றும் சுப்ரமணியரை ஆத்ம தெய்வமாக வழிபடுபவர்கள். இவர்கள் கொற்றவை தெய்வங்களையும் வணங்கி வருகின்றனர்.
இவர்களின் குரு வசிஸ்டர்.

வசிஸ்டச ப்ரவரான்களை சேர்ந்த அனைத்து கோத்திரத்தார் அனைவரும் அக்னி வம்சத்தை சேர்ந்தவர்கள்.

ஆக நம் கோத்திரத்தை வைத்து பிரவரானை கண்டுபிடிக்கலாம், நம் கோத்திர ஸ்லோகத்தில் முதலாவதாக வரும் முனிவரின் பெயரே நம் மூல பிரவரான்..

உதாரணமாக..

பலிசெட்ல எனும் குலத்தை கொண்ட பரத்வாஜஸ கோத்திரத்தின் பிரவரான் பற்றி அறிய கீழ் உள்ள ஸ்லோகத்தில் காண்போம்.

ஆங்கிரஸ ப்ருஹத்பாஸ்ய பரத்வாஜேதி த்வையார் ஷேய ப்ரவரான் விதா பரத்வாஜஸ‌ கோத்ரஹ.

இந்த ஸ்லோகத்தில் முதலாவதாக வருவது ஆங்கிரஸர் எனும் முனிவரின் பெயர், இதுவே பரத்வாஜஸ கோத்திரத்தின் ப்ரவரான்.

இப்போது ப்ரவரானை வைத்து உங்கள் வம்சத்தை அறியலாம். உங்கள் வம்சத்தை வைத்து நீங்கள் செய்ய வேண்டிய தீபாவளி கொண்டாடும் முறைகள் அறியலாம்..

அக்னி வம்சத்தார் எமதீபமும், கேதார கெளரி விரதமும்.

சூரிய வம்சத்தார் தீபவரிசையையும், நீலு நிஞ்சே பண்டக எனும் முறையையும்.

சந்திர வம்சத்தார் நல்ல எண்ணெய் தைத்து, கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்..

தந்தை மற்றும் தாய் வழி என அனைத்து வம்சமும் நம் உடலில் இருக்கலாம். எனவே ஆரிய வைசியர்கள் பொதுவாக செய்ய வேண்டிய முறைகள் காணலாம்.

தீபாவளி முதல் நாள்

தீபாவளி முதல்நாள் யமதீபம் ஏற்ற வேண்டும், இது பித்ருக்களுக்கு நாம் செய்யும் கடமை. வீட்டில் உயரமான இடத்தில் தெற்கு நோக்கி புதுவிளக்கில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்ற அது அன்று இரவு வரை அணையாமல் பார்த்து கொள்ளவும், வீட்டில் ஏற்ற முடியாதவர்கள் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது மாடியிலோ எற்றலாம். தீபம் அணையாமல் பார்த்து கொள்ளவும்..

நீலு நிஞ்சே பண்டக

கங்கை நீர் நிரப்பும் பண்டிகை என்றும் சொல்வர். தீபாவளி முதல் நாள் இரவு, வீட்டின் வெளியே ஓரிடத்தில் வெட்டவெளியில் சுத்தம் செய்து நீரிட்டு மெழுகி, கோலமிட்டு அதன் மீது மூன்று செங்கல் வைத்து அடுப்பு அமைப்பில் வைத்து, அதன் மீது புதியதோர் பாத்திரத்தில் மஞ்சள் கங்கணம் கட்டி. அதை அப்படியே திறந்து வைக்க வேண்டும். ஏனெனில் தீபாவளி முதல்நாள் இரவு, தீபாவளி விடிய விடிய எப்போது வேண்டுமானாலும் கங்கை அன்று மட்டும் ஆகாய கங்கையாக மாறி வானமுழுவது பரவி நீர் நிலைகளில் சென்று நிரம்புகிறது.

மறுநாள் காலை அந்த நீருடன் சுடுநீரோ அல்லது அதை அடுப்பு மூட்டி வெந்நீராக மாற்றி அந்நீரால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்..

எண்ணெய் குளியல்

முதல் நாள் இரவே, ஒரு தட்டில் எண்ணெய், சந்தனம், குங்குமம், பழம், வெற்றிலை என அனைத்தையும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

கோத்திர தீர்த்தம்

காலை எழுந்தவுடன் ஒரு மனை போட்டு அதன் மீது அமர்ந்து பெரியவர் ஒருவர் ஒரு பூவால் தொட்டு எண்ணெய் தேய்த்து பின் அவரவர் கோத்திர தீர்த்தத்தை மனதில் நீரை கையில் எடுத்து கோத்திர தீர்த்த பெயரை சொல்லி ஆவாஹயாமி, ஆவாகனம் என சொல்லி, மீண்டும் அதே பாத்திரத்தில் விடவும். இதே போல் மூன்று முறை செய்ய வேண்டும். பின் கோத்திர தீர்த்தத்தில் குளிப்பதாய் எண்ணி ஸ்நானம் செய்ய வேண்டும்.

தான தருமம்

ஸ்நானம் செய்த பின் அவரவர் கோத்திர குருவை எண்ணி அவரை வணங்க வேண்டும்.

பின் அவரவர் கோத்திர இறைவனை வணங்கி பின், அவரவர் கோத்திர முறைப்படி தான தருமங்கள் செய்ய வேண்டும்..

ஒவ்வொரு கோத்திர மக்களின் தீர்த்தம், தெய்வம், தானம் செய்ய வேண்டிய பொருள், கோத்திர ஸ்லோகம் ஆகியன அறிய..

அடியேன் உருவாக்கிய, கீழே உள்ள PDF-ஐ பார்க்கவும், சர்ச் பாக்ஸில் உங்கள் கோத்திர பெயரை போட்டால் உங்கள் கோத்திர விளக்கத்தை அறியலாம்.

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group