இயற்கை பிரசவ முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வைசிய குடும்பத்தின் கதை!

    16042

    பிரசவ கால கதைகளை நம் அம்மாக்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். அந்த கதைகளை கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும். முன்பெல்லாம் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுக்க கூட விட மாட்டார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பிரசவத்தையே வீடியோவாக எடுக்க அனுமதிக்கிறார்கள்.

    பெரும்பாலான ஆண்களுக்கு பிரசவம் என்பது ஒரு அறைக்குள் நடக்கும் நிகழ்வாக மட்டும் தான் தெரியும். ஆனால் இன்றைய பிரசவத்தில் கருவுற்ற தாயுடன் அவர் கணவரையும் பிரசவ அறைக்குள் உடனிருக்க அனுமதிக்கிறார்கள்.


    இது போல மகப்பேறு மருத்துவம் பல கால கட்டங்களை கடந்து, பல நவீன மாற்றத்தை சந்தித்துள்ளது. நாம் அறிந்தவரையில் சுக பிரசவம் மற்றும் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை முறை தான் பலருக்கும் பரிச்சியம். ஆனால் பலரும் அறிந்திடாத ஒரு அற்புத முறை தான் இயற்கை பிரசவ முறை. அதாவது மிட்வைப் மாடல் (Midwifery Model) என்பார்கள். மிட்வைப் என்றால் தமிழில் பேறுகால உதவியாளர் என்று சொல்லலாம்.

    இந்த முறையில், இயற்கையான முறையில் ஒருவர் பிரசவ அனுபவத்தை பெற முடியும். மேலும் பிரசவத்தின் போது ஏற்படுகிற சிக்கல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் இயற்கையான முறையில், மிட்வைப் எனப்படும் பேறுகால உதவியாளர்களின் வழிகாட்டுதல் படி தீர்வு காண்பார்கள். இவர்களுடன் எப்போதும் ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த முறை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும். இந்த பிரசவ முறையில் மிட் வைப்பாக இருப்பவர்கள் சர்வதேச அளவில் பல ஆயிரம் பிரசவம் பார்த்த அனுபவசாலிகளாக இருப்பார்கள்.


    நம் சமூகத்தை சார்ந்தவர்களும் இந்த முறையில் பிரசவ அனுபவத்தை பெற்றுள்ளனர். அதன் படி, பெங்களூரில் இருக்கும் ஶ்ரீமதி அவர்கள் இயற்கை பிரசவ முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், அவர் தன் அனுபவத்தை கூறும் போது:
    “என்னுடைய முதல் பிரசவம் வழக்கமான முறையில் தான் நடந்தது. ஆனால் அந்த பிரசவம் மூலம் “எபிஸ்யோடோமி” வலியை ஒரு மாதம் சமாளிக்க வேண்டியிருந்தது. அதனால் எங்கள் இரண்டாம் குழந்தையின் பிரசவத்திற்கு மாற்று முறையை பார்க்க தொடங்கினோம். அப்படி தேடிய போது நாங்கள் கண்டு அறிந்தது தான் கோச்சியில் இருக்கும் “பர்த் வில்லேஜ்” மையம்.

    என் பிரசவத்தின் காரணமாக நாங்கள் கொச்சிக்கு குடி பெயர்ந்தோம். அப்போது ஒரு மாலில் ஷாப்பிங்க் செய்து கொண்டிருந்த போது எனக்கு பிரசவ வலி வந்தது. அது பிரசவ வலி தான் என்பது கூட எனக்கு தெரியவில்லை. அன்று இரவே பிரசவ மையத்திற்கு சென்றோம். என் வயிற்றை பரிசோதித்து குழந்தையின் இதய துடிப்பை பரிசோதித்தனர். அரை மணி நேரத்திற்கு பின்பு நான் சிறிய செயற்கை குளம் ஒன்றில் அமர்ந்த நிலையில் அமர்ந்திருந்தேன். அப்போதே என் வலி உடனடியாக குறைந்ததை உணர்ந்தேன். மிக ரிலாக்ஸ்டாக எனக்கு பிடித்த பாடல்களை கேட்டேன். என் உள்ளுணர்வின் படி தேவைப்படும் போது நான்கு முறை அழுந்த தள்ளினேன். என் குழந்தை இந்த உலகத்திற்கு வந்தது.
    இதில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தது, என் கணவர் என் பிரசவம் முழுவதிலும் என்னை தாங்கி கொண்டார், என் 5 வயது மூத்த மகன் என் பின்னிருந்து இந்த பிரசவத்தை காணொலியாக பதிவு செய்தான்” என்று வியப்பும் மகிழ்வுமாக தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    மேலும் சென்னையில் இருக்கும் நம் வைஸ்ய சமூகத்தை சார்ந்த மதுமிதா அவர்கள் கூறும் போது: “என் பிரசவத்திற்கு நான் இயற்கை பிரசவ முறையை தேர்வு செய்தேன். என் பிரசவத்தின் போது எனக்கு பெரிதாக வலி இருக்கவில்லை. ஆனால் குழந்தையின் தலை சரியான இடத்தில் இருக்கவில்லை. மூன்று முறை தலை சுற்றியிருந்தது. மேலும் என் பனிக்குடம் உடைந்து, குழந்தையின் எடை குறைவாக இருந்தது. நான் பெங்களூரில் இருக்கும் “பர்த் ஹோம்” எனும் இயற்கை பிரசவ முறை மையத்தில் சிகிச்சை எடுத்து கொண்டேன்.
    அங்கு இயற்கையான டெக்னிக்ஸ் மூலமாக எனக்கு உதவினார்கள். குறிப்பாக “பார்வர்ட் லீனிங் இன்வர்ஷன்” எனும் டெக்னிக் மூலமாக உடற்பயிற்சி செய்து குழந்தையின் தலையை சரியான இடத்திற்கு எடுத்து வந்தோம். மேலும் பனிக்குடம் உடைந்திருந்ததற்கு சில டெக்னிக்ஸை பயிற்சி செய்தேன். மேலும் வலியை தாங்கி கொள்ள சுவாச பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் எந்த நிலையில் நின்றால் எனக்கு வலி குறைவாக இருக்கும் என்பதை என்னையே உணரச்செய்து, அந்த நிலையில் நின்றவாறே என் குழந்தையை பிரசவித்தேன். மிகவும் ஆச்சர்யகரமாக, பிரசவம் முடிந்த 5 – 6 மணி நேரத்தில் நான் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.” என உணர்ச்சி ததும்ப பகிர்ந்து கொண்டார்.

    ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒரு சில இயற்கை பிரசவ மையங்கள் மட்டுமே இருக்கின்றன. அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஒரு செயல்முறையில், ஆரோக்கியம், அக்கறை, அன்பு, அனைத்தும் அளவில்லாமல் அள்ளி தரும் அட்சயபாத்திரமாக இந்த “மிட்வைப்ரி மாடல்” எனும் இயற்கை பிரசவ முறை செயல்படுகிறது.

    Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

    VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

    Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group