சரித்திரத்தில் இடம்பெற்ற ஆரிய வைசியர்கள் | பொட்டி ஸ்ரீராமலு

6837

அமரஜீவி

ஆந்திர மக்களால் அமரஜீவி என அழைக்கப்படுபவர், ஆந்திரா எனும் தனிப்பெரும் மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும் தன்னையே அர்ப்பணித்தவருமான பொட்டி ஸ்ரீராமலு அவர்கள் ஒரு ஆரிய வைசியர் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு அவரை மறந்தாலும் ஒரு ஆரிய வைசியரான அவரை நாம் மறக்க கூடாது. அவரை பற்றி சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

பொட்டி ஸ்ரீராமலு

இவர் குருவைய்யா, இலட்சுமி அம்மா ஆகியோருக்கு 1901ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 16-ம் தேதி மகனாகப் பிறந்தார். இவரது சொந்த ஊரான படமட்டிபள்ளி பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது. அப்போது பழைய நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வறுமைக் காரணமாக அவர் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. தனது உயர்நிலை பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்தார். பம்பாயில் உள்ள விக்டோரியா ஜூப்ளி தொழில்நுட்ப நிறுவனத்தில் சுகாதாரப் பொறியியல் படித்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு 1928-இல் பம்பாயில் இந்திய ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் அவரது மனைவியும், புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது வேலையை விட்டு விலகி, காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் மனிதக்குலத்திற்குச் சேவை செய்யவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

தனிமாநிலம்!

விடுதலைக்குப் பிறகு தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க சென்னையை தலைநகராகக் கொண்ட தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு மக்களால் எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பிரதமர் சவகர்லால் நேரு போன்றவர்கள் நிராகரித்தனர். ஆந்திர மாநிலம் உருவாக்கப்படாததால் ஸ்ரீராமுலு சென்னையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை 19 அக்டோபர் 1952 அன்று துவக்கினார். புதிய மாநிலம் அமைவதைப் பற்றிய அறிக்கை வெளிவராததால் ஸ்ரீராமுலு தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக 15 டிசம்பர் 1952 அன்று இரவில் இறந்தார். இதன் விளைவாக நேரு அவர்களால் 1953-ல் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது.

பொட்டி ஸ்ரீராமலு நினைவாக இந்திய அரசு வெளியிட்ட தபால் தலை

தெலுங்கு பேசும் மக்களுக்கு என ஒரு அடையாளமாக ஆந்திராவை உருவாக்கி தந்த ஒரு மாமனிதராய் விளங்கிய பொட்டி ஸ்ரீராமலு ஒரு ஆரிய வைசியர் என்பது நமக்கு எவ்வளவு பெருமை என்பதை சிந்தித்து பார்ப்போம்.

நினைவிடம்

பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராதாகிருஷ்ணன் சாலையில் 126-ம் எண் கொண்ட வீட்டில் இறந்தார். இவர் நினைவாக இந்த வீட்டை ஆந்திர மாநில அரசு நினைவு சின்னமாகப் பாதுகாக்கிறது.

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp