கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கல்வ குண்டல ராமண்ணா. தாயார் பெயர் லக்க்ஷ்ம்மா. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார்.
Click here to Read the First Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs
காந்திஜியின் வழிகாட்டுதலால் நம் நாட்டில் சுதந்திர போராட்டம் இளைஞர்களிடையே கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது நேரம் அது. எனவே இளைஞனான குப்தாவும் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் மாணவப் பருவத்தில் இருக்கும் பொழுதே ஒரு சிறந்த எழுத்தாளர். எனவே தூங்கிக் கிடக்கும் ஆந்திர மக்களை எழுப்ப பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதன் பெயர் கிரந்த மாலா அதன் விலை ஒரு அணா (அதாவது 6 பைசா) எனவே, அது அணா கிரந்த மாலா என்று அழைக்கப்பட்டது.
இதில் இளைஞர்களை எழுச்சிக்கொள்ள செய்வதற்காக பல சுதந்திர போராட்ட வீரர்களின் வீர வரலாற்றை அவர் எழுதினார். இவர் ஆங்கிலம், உருது மற்றும் தெலுங்கில் அற்புதமாக எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போரிட்ட சத்திரிய வம்சத்தில் பிறந்த அல்லூரி சீதா ராமராஜுவின் வரலாற்றை மற்ற மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருது மொழியில் அவருடைய வரலாற்றை எழுதினார்.
அதனால் ஆங்கில அரசின் கோபத்துக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டதை தான் நாம் கட்டுரையின் முன் பகுதியில் கண்டோம்.
அல்லூரி சீதாராமராஜு அப்படி என்னதான் செய்தார் என்று பார்ப்போமா? ஆங்கிலேயர்கள் காடுகளின் வளத்தை சுரண்டினார்கள். அதற்கு தடையாக இருந்த மலைவாழ் மக்கள் காடுகளில் நுழைவதை தடுத்தார்கள். மெட்ராஸ் பாரஸ்ட் ஆக்ட் என்கிற சட்டத்தின்படி இனிமேல் காடுகளில் ஆங்கிலேயர்களின் அனுமதி இல்லாமல் மலைவாழ்மக்கள் வாழக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதை மீறுபவர்கள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் போலீசாரால் விசாரணை இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அநீதியை கண்ட அல்லூரி சீதாராமராஜு பொங்கி எழுந்தார். அந்த மக்களுக்காக புரட்சியில் ஈடுபட்டார். காட்டில் சென்று பிழைப்பை தேடுவது அவர்களின் பிறப்புரிமை என்று முழங்கினார். இவரை மான்யம் வீருடு (காடுகளின் நாயகன்) என்று அழைத்தனர்.
மலைவாழ் மக்களை விசாரணை இல்லாமல் கொன்று அட்டூழியம் செய்த பல ஆங்கில அதிகாரிகளை தேடிப்பிடித்து சுட்டுக்கொன்று பழிக்கு பழி வாங்கினார். அவரின் பெயரைக் கேட்டாலே ஆங்கில அதிகாரிகள் நடுங்கினர். அவரை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பின் காட்டில் அவர் பிடிக்கப்பட்டார். பிறகு எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் ஒரு மரத்தில் அவரை கட்டி வைத்து போலீசார் கோழைத்தனமாக அவரைசுட்டுக் கொன்றனர். இந்த வீரச் செயலை செய்த அல்லூரி சீதா ராமராஜூக்கு விசாகப்பட்டினத்திலும், ஹைதராபாத்திலும் பிற்காலத்தில் சிலை வைக்கப்பட்டது. ஆந்திராவில் இவரைப்பற்றிய திரைப்படம் கூட வெளிவந்தது. மத்திய அரசாங்கம் இந்த வீரரின் உருவம் பொறித்த தபால்தலையைக் கூட பின்னர் வெளியிட்டது. இவ்வாறு பிற்காலத்தில் மக்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்தாலும், அக்காலத்திலேயே அல்லூரி சீதாராமராஜுவின் வீரத்தையும், தியாகத்தையும் முதலில் வெளிப்படுத்திய பெருமை நம் குப்தாஜி அவர்களையே சாரும்.
ராஜுவின் வரலாற்றை எழுதியதால் இவரின் அணா கிரந்த மாலா தடைசெய்யப்பட்டது. அதற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அது என்ன என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
பண்ருட்டி சொ.முத்துக்குமார்.
To be continued…
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group