ஆன்மீக சுற்றுலா – கழுகு மலை வெட்டுவான் கோவில் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

4528

திருநெல்வேலியிலிருந்து கழுகுமலைக்கு புறப்பட்டோம். அங்கு செல்வதற்கு முன் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இவ்வூருக்கு கழுகாச்சலம், தென்பழனி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என பழங்கால பெயர்கள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் ஒரு சிறு மலையின் ஒரு பகுதியை அப்படியே செதுக்கி இக்கோயிலை வடித்திருக்கிறார்கள்.(இயந்திரங்கள் இல்லாமல் இது எப்படி சாத்தியம்? புரியவில்லை)

இந்தியாவில் இது போல் மராட்டிய மாநிலத்தில் உள்ள எல்லோராவில் மட்டுமே இப்படிப்பட்ட கோயில்கள் உண்டு என்று சொல்கிறார்கள். மலையின் ஒரு பகுதியில் 7.5 மீட்டருக்கு சதுரமாகவும் ஆழமாகவும் வெட்டி அதன் நடுப்பகுதியை மட்டும் கோயிலாக செதுக்கியிருக்கிறார்கள். விமானத்தில் காட்சியளிக்கும் உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால் பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர். பொதுவாக வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தியின் உருவத்தை பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி ஒய்யாரமாக மிருதங்கம் வாசிக்கும் அழகை கண்டு ரசிக்க மட்டுமல்லாமல் அப்படியே பிரமித்து நிற்கலாம்.

சிவபெருமானின் பூதங்கணங்கள் இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற சிற்பங்கள் நம்மை வியக்கவைக்கின்றன. பாண்டிய மன்னன் பராந்தகநெடுஞ்செழியன் காலத்தில் (சுமார் 800 AD) இந்த குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. மலையை மேல் புறத்திலிருந்து குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு நம்மை அசர வைக்கின்றது.

ஒவ்வொரு சிற்பமும் அசாத்திய அழகுடன் இதை விட யாரும் சிறப்பாக எங்களை செதுக்கமுடியாது என்று தங்களைப்படைத்த சிற்பிகளுக்காக பரிந்து பேசுவதுபோல் உள்ளது.

வேறு கிரஹத்தை சேர்ந்த சிற்பிகள் செதுக்கியிருக்கலாமோ எனக்கூட மிகையாக எண்ணத்தோன்றுகிறது

கோயில் முழுமையடையாமல் இருக்கும் போதே நம் கற்பனை எங்கேயோ போகிறது என்றால் இந்த சிறிய கோயில் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால்…..மன்னிக்க …என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கருவறையில் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வருகின்றனர். பிரிய மனமில்லாமல் மேலே பார்த்தேன். அங்கே சற்று உயரத்தில் காணப்பட்ட சமண சிற்பங்கள் எங்களையும் வந்து பார் என்று மென்மையாக அழைப்பது போல் இருந்தது. சிறிய படிக்கட்டுகளில் ஆர்வமாக ஏறி சென்றோம். ரிஷிப தேவரிலிருந்து மகாவீரர் வரை காணப்பட்ட சிற்பங்கள் அஹிம்சையை போதிப்பது போல் நின்று கொண்டிருந்தன.

சமணர்களுக்கு மிகமுக்கியமான இடமாக இது இருந்திருக்கிறது என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் மலையின் கீழே அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி கோயில் அனைவரும் அறிந்ததுதான். இங்கே அருள்பாலிக்கும் முருகர் மிகவும் பிரிசித்தம். இதை முருகர் கோயில் என்றே பலரும் வணங்கி செல்கிறார்கள். ஆனால் இக்கோயிலின் சற்று பின்னே அமைந்துள்ள தென் அஜாந்தா என்று போற்றப்படுகின்ற வெட்டுவான் கோயிலையும், சமணர் சிலைகளையும், படுகைகளையும் பார்க்க வருபவர்கள் மிகச்சிலரே. நண்பர்களே நீங்கள் கலையை ரசிக்கும் ரசிகர் என்றால் இந்த வெட்டுவான் கோயில் உங்கள் மனதை சுண்டி இழுக்கும், இதன் நினைவு உங்களை விட்டு அகலாது இது உறுதி.

விரைவில் இந்தக்கோயில் உலக பாரம்பரியக் சின்னத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கீழடியைப் போல் இது பிரபலமாக அந்த கைலாசநாதர் தான் அருள்பாலிக்க வேண்டும்.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பண்ருட்டி சொ. முத்துக்குமார்