116 வருட மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் | தேனி

17592
Theni_Aryavysya_satram

காஞ்சிக்குப்போனால் காலாட்டி கொண்டே சாப்பிடலாம் இந்த சொலவடையை பெரும்பாலானோர் நம்மில் கேட்டிருப்போம் இதனுடைய உண்மையான விளக்கம் என்னவென்றால் காஞ்சிபுரம் ஊருக்குச் சென்றால் அங்கே நெசவுத்தொழில் நமக்கு கை கொடுக்கும் எனவே நாம் உழைத்து காலாட்டிக்கொண்டே நெய்து கொண்டே உழைத்து சாப்பிடலாம் உழைப்பிற்கு பஞ்சமிருக்காது! என்பதே சரியான அர்த்தம் ஆகும் அதைப்போல தேனிக்கு சென்றால் தெரிவித்து சாப்பிடலாம் என்பது புதுமொழி! என்ன வைஸ்ய சொந்தங்களே புரிந்தும் புரியாதது போல் உள்ளதா?

தேனியில் 116 வருடங்களாக யாரிடமும் எந்த ஒரு நன்கொடைகளும் பெறாமல் இடைவிடாது தொடர்ந்து… “இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நாளில் கூட இந்தவேளையில் கூட” அன்னதானம் செய்து வரும் ஓர் வைஸ்ய தர்ம சத்திரம் ஒன்று தேனி பழைய பேருந்து நிலையம் எதிர்புறம் செயல்பட்டு வருகின்றது. இந்த செயலைப் பார்த்து எங்கெங்கோ நாம் வைஸ்யராக பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் அளவிற்கு பெருமை கொண்ட செயல்.

இந்த தர்மசத்திரத்திற்கு ஓர் மிகப் பெரிய வரலாறு உண்டு அதாவது நூறு வருடங்களுக்கு முன் தேனி என்பது ஊராக இல்லை மதுரை செல்லும் சாலை பெரியகுளம் வழி திண்டுக்கல் செல்லும் சாலை சின்னமனூர்பாளையம் கம்பம் வழி குமுளி செல்லும் சாலை இப்படி மூன்று சாலைகள் சந்திக்கும் இடமாக முக்கூட்டு கூட்டுச்சாலை என்று இருந்தது இன்றளவும் கூட தேனி அல்லி நகரம் நகராட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த நகராட்சிக்கு முதன்முதலில் அல்லி நகரத்தை சேர்ந்த நம் இனத்தவர் தான் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி முக்கூட்டு சாலையில் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வியாபாரிகள் விற்கவும் வாங்கவும் வந்து செல்வார்கள் நமது வைஸ்ய பிரமுகர்கள் மேற்படி கூட்டு சாலைக்கு கொள்முதலுக்கு வருவார்கள் அந்தக் காலத்தில் ஹோட்டல் சாப்பாட்டுக் கடைகள் இப்போது போல் இருக்காது எல்லோரும் மாட்டுவண்டியில் கூட்டுச்சோறு கட்டிக் கொண்டு வருவது வழக்கம் தற்போது இந்த வைஸ்ய தர்ம சத்திரம் இருக்கும் இடத்திற்கு பின்பக்கம் ஒரு வாய்க்கால் உள்ளது மேற்படி வாய்க்கால் கரையில் வெயிலில் அமர்ந்து சிரமப்பட்டு உணவு அருந்தி செல்வது அன்றைய வியாபாரிகளுக்கு வழக்கமாக இருந்தது மேற்படி வைஸ்ய தர்ம சத்திரத்தின் நிறுவனர்கள் யாவரும் அவரவருடைய சொந்த ஊர்களில் மற்ற அனைவராலும் மதிக்கப்பட்டு கௌரவமாக மரியாதையாக வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் தங்களது சொந்த ஊரில் மிகவும் சீரும் சிறப்போடு வாழ்ந்து வரும் அவர்கள் தேனி ஊருக்கு வியாபார நோக்கத்திற்காக வரும்போது சாப்பிடுவதற்கு தோதாக ஓரிடம் இல்லாதது அவர்களை மிகவும் வேதனை பட வைத்தது நாம் மட்டுமில்லாமல் நம் இனத்தவர் எல்லோரும் தங்குவதற்கு இடமும் அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவானது தான் இந்த வைஸ்ய அன்னதான தர்ம சத்திரம்.

1900ஆம் வருடம் உத்தமபாளையம் மு. கோபால் செட்டியார் குமாரர் பாலசுப்ரமணியம் செட்டியார், கோம்பை. தி.ரங்கையன் செட்டியார், குமாரர் ராமசாமி செட்டியார், திருமலைசுப்பு செட்டியார், வையாபுரி செட்டியார் குமாரர் ஸ்ரீராமன் செட்டியார் நால்வரும் ஒன்று சேர்ந்து தற்போது உள்ள இந்த இடத்தை விலைக்கு வாங்கி இரண்டு வருடங்களுக்குள் கட்டிடங்கள் கட்டி வரும்போது கம்பம் அழகிரிசாமி செட்டியார் குமாரர் சுப்பிரமணியன் செட்டியார், வாசு செட்டியார், காளப்பன் செட்டியார் என்ற ஐந்து பேர்களுக்கு ஆண்டிப்பட்டி பெத்தி செட்டியார் மகன் குருமூர்த்தி செட்டியார் மனைவி வெங்க லட்சுமி அம்மாள், பெத்தின செட்டியார் குமாரர்கள் சுப்பிரமணியன் செட்டியார், நாகுலு செட்டியார் ஆகிய மூன்று பேர்களும் சேர்ந்து தங்களின் ஈவுப்படி பணம் கொடுத்து மேற்படி சத்திரத்திற்கு தங்கள் பெற்றோர்களின் இன்சியலையும் பெயரையும் சேர்த்து மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் என்று பெயர் வைத்து சிறப்பாக வருடம் முழுவதும் அன்னதானத்தை ஆரம்பித்து வைத்தார்கள் இந்த தர்மத்திற்கு வேண்டி அரிசிக்காக வயல்வெளிகளை எழுதி வைத்தார்கள் 1920ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இது சம்பந்தமாக ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதில் இந்த தர்மம் செயல் இந்த உலகம் அளவிற்கும் நிரந்தரமாக நடக்கவேண்டும் என்பதற்காகவும் தனக்குப் பின்னால் வரும் வாரிசுகள் இந்த தர்ம சத்திரத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் 27 தர்ம பரிபாலன நிபந்தனைகளை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் மேற்படி தர்ம சத்திரத்திற்கு விபரம் தெரிந்து​ வரும் நம் குல மக்கள் வந்து உணவு அருந்தி சற்று ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக உள்ளது இங்கிருந்து மட்டுமல்ல ஆந்திராவிலிருந்து பஞ்சு வியாபாரம் சம்பந்தமாக வருகின்ற நம் சமூகத்தினர் மிக மகிழ்ச்சியுடன் உணவருந்தி ஓய்வெடுத்து மகிழ்வாக செல்கின்றனர் 1991 ஆம் ஆண்டு தேனியில் தனியாக வாசவி மஹால் அமையப்பெற்றது வரை அதற்கு முன்பாக நம் சமுதாயத்தினரின் குடும்பங்களில் நடைபெற்ற அத்தனை விசேஷங்களும் இந்த தர்ம சத்திரத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது எந்தவித வாடகையும் வசூலிக்கப்படாமல் முற்றிலும் இலவசமாகவே விசேஷங்கள் நடத்தப்பட்டுவந்துள்ளது.

இந்த வைஸ்ய தர்மசத்திரத்திற்கு வரும் நம்மவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறி நம்முடைய வைசிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் நிரந்தரமாக இந்தப் பணியை செய்து வருகின்றார்கள். இந்த தர்ம சத்திரத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள் இன்றளவும் இந்தப் பணியை முன்னோர்களின் விருப்பப்படி நம் குல தெய்வத்தின் அருள் வேண்டி செய்துவருகின்றார்கள்.

வயல் வெளிகள் மட்டுமல்லாது உழைப்பவருக்கு ஊதியம் கொடுப்பதற்காக தர்ம சாத்திரத்தின் முன்புறம் ஒரு சில கடைகளை கட்டி அந்த வாடகை வருமானத்தைக் கொண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு இன்றளவும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்காக யாரிடமும் எந்தவிதமான நன்கொடைகளும் இதுவரையிலும் இனிமேலும் வாங்குவதில்லை என்பது இந்த தர்ம சாத்திரத்தின் தனிச்சிறப்பாகும்.

தேனிக்கு வரும் வைசிய குல சொந்தங்களே நீங்கள் யாவரும் எங்களது வைசிய தர்ம சாஸ்திரத்தில் வந்து தங்கிச்செல்ல உணவருந்தி செல்ல ஓய்வெடுத்து செல்ல உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம் என்கின்றார்கள் இந்த தர்ம சத்திரத்தின் நிர்வாகஸ்தர்கள். வாழ்க பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! இந்த தர்ம சத்திரத்தை உண்டாக்கிய பெரியோர்களின் வாரிசுகள் யாவரும் இறையருளால் மற்றவர்கள் போற்றத்தக்க வகையில் வாழ்ந்து வருகின்றனர் இது தர்மசிந்தனைக்கான பலன்.

இந்த சத்திரத்தைப் பற்றி உங்கள் அனைவருடன் பகிர்வதற்காக கண்ணன் ஆகிய நான் நேரில் சென்று இந்த தர்ம சாஸ்திரத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களைப் போலவே ஆச்சரியப்பட்டு மெய்மறந்து சிலையாக ஆகாமல்……நின்று அங்குள்ள வருகையாளர்கள் பதிவேட்டில் பெயரெழுதி… கையொப்பமிட்டு… அன்னதானம் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து… வந்து அனுபவபூர்வமாக அனுபவித்து உங்கள் அனைவருடனும் எழுத்தால் பகிர்ந்துள்ளேன்.

அன்னதானம் என்று சொன்னவுடன் ஏதோ ஒப்புக்கு செய்யும் சாப்பாடு அல்ல மல்லிகை பூ சாதம், சாம்பார், ரசம், மோர் குழம்பு, அப்பளம், ஊறுகாய், மோர்,  மூன்று வகை கூட்டு என ஓர் விருந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.

எதையுமே நம்முடைய அனுபவத்தில் வந்தால் தான் நம்மால் அதை 100% உணர முடியும். எனவே நீங்கள் யாரேனும் தேனி பக்கம் வந்தால் அனுபவிக்க வேண்டியது தென்மேற்கு பருவக்காற்று மட்டுமல்ல வள்ளலார் ஏற்றிய அணையாத அடுப்பை போல தேனியிலும் வள்ளல்கள் ஏற்றிய அணையா அடுப்பு எத்தனையோ உள்ளங்களின் உன்னதமான வயிற்றையும் மனத்தையும் குளிர வைத்துக்கொண்டுள்ளது. எனவே நீங்களும் ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள் அந்த ஆத்ம பேரானந்தத்தை! அன்னதான ஆனந்தத்தை!!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

6 COMMENTS

  1. இந்த அன்னதானம் மேன்மேலும் பல்லாண்டுகள் சிறப்பாக நடந்திடவும் அவர்களின் வாரிசுகள் பல்லாண்டு வாழ்திடவும் இறைவனை பிராத்திக்கிறேன்

  2. மனமார்ந்த வாழ்த்துக்களை வைஸ்ய குல நம் தேனியில் நடத்தி வரும் அன்னதான சொந்தங்களுக்கு தெரிவித்துகொள்ளுகிறேன்.வாழ்க பல்லாண்டு.ஒருமுறை அந்த இடத்தை கான விருப்பப்படுகிறேன்.நன்றி.

  3. அற்புதமான சேவை.ஆடம்பரம் இல்லாது உதவிகரம் நீட்டுகின்றனர்
    அன்னம் கொடுத்தோன் உயிர் கொடுத்தோன் ஆகிறான்.
    வைஸ்ய குல மக்கள் வியாபரத்திற்கு மட்டுமில்லை,
    தேவையானவர்களுக்கு தேவையான பொருள் உதவியும் செய்பவர்கள்.வைஸ்ய தர்மம் விவசாயம் ,பால்,பல பொருள் வியாபாரம் செய்வதே.வாழ்க நம் சமுதாயம்..தண்டபாணி கோவை.

  4. வணக்கம்

    நான் அந்த பெரியோர்களின் பரம்பரையைச் சேர்ந்தவள்.
    திரு மு. பிரபாகரன் அவர்களின் தம்பி மனைவி .
    தேனி அன்னதான சத்திரத்தில் மதியம் 12.30 முதல் 2.30 வரை சாப்பாடு இருக்கும். ஒருவேளை 2.00 க்குள் வந்து விட்டாலும் மறுபடியும் சாதம் சமைத்து பரிமாறுவார்கள் :
    சாரதா , க /பெ திரு மு. ஶ்ரீதரன்