ஆர்ய வைசியர் வரலாறு – பிராமணர்களின் சாபம் | பாலா வெங்கட்ராமன்

6558
History of Aryavysya_03

சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள் நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும் எங்களை இகழாத ஆரிய வைசியர்கள் ஒரு கன்னியின் பொருட்டு 102 கோத்திரக்காரர்கள் மட்டும் புனித வேள்வித் தீயில் தங்களை அர்பணித்துக் கொண்டு புகழேணியில் ஏறி ஆரிய வைசியர் என பாராட்டப் பெறுவீராக.

இந்த 612 கோத்திரங்களும் வேள்வித்தீயைக் கண்டு அஞ்சி உயிர் காக்க ஓடி பழிக்கப்படுவாராக.

முந்தைய பதிவை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

இதுவரை படித்தது புராணப்படி நம் வரலாறு, இனி அறிவியல் படி நமது வரலாறு!

வைசியர்கள் பிரம்மனின் தொடையில் இருந்து தோன்றினார்கள் என்பதற்கு உண்மையான விளக்கம் பிரம்மா என்பது படைப்பாக எடுத்துக்கொண்டால், வைசியனின் படைப்பு வணிகத் தொழில் செய்தல் அவன் நெடுந்தூரம் கடல் கடந்து பல தேசம், பல ஊர்கள் சென்று பொருள் ஈட்ட வேண்டி இருந்தது. அதற்கெற்ப இயற்கையிலேயே வலிமையான கால்கள் அமையப்பெற்றான். வலிமையான கால்களுக்கு ஆதாரமாக பலமான தொடையை அமைக்கப்பட்டு இருந்தான், தொடையினால் அவன் படைப்பாற்றலான வணிகம் நடந்ததால் வைசியன் தொடையில் பிறந்தவன் என்றனர்.

இயற்கை அமைப்பு

இப்போது கூட ஆரிய வைசியர்களின் தொடைகள் சற்று பருத்திருக்கும். காரணம் அவர்கள் தலைமுறை வணிகம் செய்வதால் இயற்கையிலேயே வலிமையான கால்களுக்கு ஆதாரமான பருத்த தொடை கொண்ட இந்த அமைப்பு தலைமுறை ஜீன்களோடு கலந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

தோற்றம் மற்றும் பெயர் காரணம்….

ஆர்ய வைசியர்களை கோமுட்டி என்று பொதுவாக கூறுவர். நாம் அதை கேவலமாக நினைக்கிறோம் ஆனால் அந்த பெயரில்தான் நம் சரித்திரமே புதைந்திருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அது நம் பிறப்பு பெயர்!

அதற்கு முதலில் ஆரிய வைசியர் எனும் சொல்லுக்கு பெயர்காரணத்தை அறிய வேண்டும்.. அறிவோமா!

ஆதியில் வைசியர்கள் அந்தணர்களை போல சைவ ஆகமவிதிப்படி சிவபூசைகள் செய்தார்கள், அவர்களே சிவாலயங்களில் சிவபூசை செய்யும் அந்தணர்களாகவும் விளங்கினர் என்றும் கூறப்படுகிறது. ஆரிய தொழிலான வேத பூஜை செய்து பின் வந்தேறி பார்ப்பன ஆதிக்கத்தால் வாணிபம் செய்ததால் ஆரிய வைசியர்கள் எனப்பட்டனர்.

கோமுட்டி

கோமுட்டி என்ற சொல்லுக்கு பல பெயர் காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது கீழ்கண்ட காரணம் ஆகும்….

கோமுட்டி எனும் சொல் கோமட்டி என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகும்..

அதாவது கோ + மட்டி என்று பிரித்தால் அதன் பொருள் இன்னும் தெளிவாக விளங்கும். கோ என்றால் கோதவரி நதி என்றும், மட்டி என்றால் நதிக்கரையை அதாவது அந்த நதிக்கரை மண் என தெலுங்கில் பொருள் உண்டு. ஆக கோமட்டி என்றால் கோதவரி நதிக்கரையை சேர்ந்தவர்கள் என்று பொருள்.

உலகின் பெரிய பழமையான நாகரிகங்கள் நதிக்கரையில் தான் தோன்றியது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நதிக்கரை நாகரீகங்கள் என்றாலே அவை குறைந்தது 2000 ஆண்டுகள் பழமை கொண்டிருக்கும் எனலாம். ஆக கோமுட்டி நாகரிகமும் அதன் பெயரில் இருந்தே கோதவரி நதிக்கரையில் பிறந்த நாகரிகம் என உறுதியாகிறது. இதிலிருந்தே கிட்டதட்ட ஆரிய வைசியர்களுக்கு 2000 ஆண்டுகள் பழமை இருந்திருக்க கூடும் என யூகிக்கலாம் என தெலுங்கு வரலாற்று எழுத்தாளர் திரு. குப்தா கூறியுள்ளார்.

ஆனால் கோமட்டிகள் கோமதீஸ்வரா எனும் ஜைன துறவியின் வழி தோன்றல்கள் என திரு. அனுமந்தராவ் கூறுகிறார்….

கோமுட்டிகளுக்கும் ஜைனர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆரியவைசியர் எதிலிருந்து தோன்றிய பிரிவினர்?

இதற்கான விடை அடுத்த பதிவில்!